பண்ருட்டியில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன் வீட்டில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை

பண்ருட்டியில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-05 14:31 GMT
பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் எம்.சி.தாமோதரன் (வயது 65). முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளருமான இவர், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் அண்ணன் ஆவார்.

இந்த நிலையில் எம்.சி.தாமோதரனின் மகன் பிரதீப், திருமண நிச்சயதார்த்த விழா கடந்த 26-ந்தேதி சென்னையில் நடைபெற்றது. இதற்காக அவர், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள வீட்டிற்கு சென்று தங்கினார்.

இதற்கிடையே நேற்று காலை வேலைக்கார பெண், எம்.சி.தாமோதரனின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் எம்.சி.தாமோதரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் பதறியடித்துக்கொண்டு பண்ருட்டி வந்தார்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 இரும்பு பீரோக்களின் சாவியை எடுத்து திறந்து, அதில் இருந்த பொருட்கள், துணிமணிகளை வெளியே எடுத்து போட்டு விட்டு பணம், நகைகள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்துள்ளனர். ஆனால் அவற்றில் நகைகள், பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டார். பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், அவருடைய மகன் பிரதீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், தனது மகன் நிச்சயதார்த்த விழாவுக்காக வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து சென்றுவிட்டதாக கூறினார்.


இதற்கிடையே கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அதுமோப்பம் பிடித்தபடி வீட்டில் இருந்து சென்னை ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்