தண்ணீர் வரத்து இல்லாததால் குறைந்து வரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் - விவசாயிகள் கவலை

தண்ணீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-11-05 13:59 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை ஆகியவற்றின் மூலமாகவும் தண்ணீர் வரும். ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.5 அடியாகும்.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரி கடந்த 10 மாதங்களில் மட்டும் 2 முறை முழு கொள்ளளவை எட்டியது.

நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.70 அடியாக உள்ளது. இதில் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மூலம் வினாடிக்கு 204 கனஅடியும், வீராணம் ஏரியில் உள்ள 34 மதகு மூலம் வினாடிக்கு 242 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்கு அனுப்பப்படுகிறது. மேலும் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 66 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், விவசாய பாசனத்திற்கு மற்றும் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவதாலும், கடும் வெயிலின் தாக்கத்தாலும், வடகிழக்கு பருவமழை இதுவரை சரிவர பெய்யாத காரணத்தாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வீராணம் ஏரி இந்த ஆண்டு 2 முறை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாத காரணத்தாலும், பாசனம் மற்றும் சென்னை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்படுவதாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் 42.7 அடியாக குறைந்துள்ளது. தற்போது கல்லணையில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று (வியாழக்கிழமை) காலை கீழணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழணைக்கு வரும் தண்ணீர் அப்படியே, வீராணம் ஏரிக்கு அனுப்பப்படும் என்றார்.

மேலும் செய்திகள்