ஆண்டிப்பட்டி அருகே ஜீவசமாதி ஆகப்போவதாக கூறி குழிக்குள் தவம் இருந்த அகோரி - பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு

ஆண்டிப்பட்டி அருகே ஜீவசமாதி ஆகப்போவதாக கூறி குழிக்குள் இறங்கி தவம் இருந்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-05 11:21 GMT
கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 3-வது மகன் அசோக் என்ற சொக்கநாதர் (வயது 39). இவர் தனது 13-வது வயதில் ஊரைவிட்டு வெளியூர் சென்று விட்டார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சொக்கநாதர், உத்தரபிரதேச மாநிலம் காசிக்கு சென்றுள்ளார். அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அவர் அகோரியாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும் அகோரியாக மாறுவதற்கு பல்வேறு நிலைகளை தாண்டி சிவபெருமானின் அருள் பெற்றாராம்.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர், தனது சொந்த ஊரான மொட்டனூத்துக்கு வந்தார். அப்போது தனது கிராமத்தில் உள்ள மக்களிடம் தன்னை அகோரி என்றும், சிவபெருமானின் அருள் பெற்றவர் என்றும் கூறினார். இதுதவிர தான் முக்தி அடைவதற்காக ஜீவசமாதி ஆக போவதாக கூறி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிவபெருமானின் உத்தரவின்பேரில் அருகில் உள்ள தோட்டத்தில் ஜீவசமாதி ஆக போகிறேன் என்றும், அதற்காக குழி தோண்டி அதில் இறங்கப்போவதாகவும் அங்குள்ள பக்தர்களிடம் சொக்கநாதர் தெரிவித்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்தனர். அதன்படி நேற்று காலை மொட்டனூத்துவில் உள்ள தனியார் தோட்டத்தில், 12 அடி ஆழ குழி வெட்டப்பட்டது. பின்னர் அந்த குழியில் சிமெண்டு சிலாப்புகள் வைத்து சமாதி போன்று அமைக்கப்பட்டது. அந்த சமாதிக்குள் சிவபெருமான் படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை அடுக்கி வைத்த சொக்கநாதர், அதனுள் அமர்ந்து தவம் இருக்க தொடங்கினார். மேலும் சமாதியின் மேல் பகுதியை சிமெண்டு சிலாப்புகளை வைத்து மூடிவிடும்படியும் பக்தர்களிடம் கூறி உள்ளே அமர்ந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜீவசமாதி அடையப்போவதாக குழிக்குள் இறங்கிய சொக்கநாதரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பல ஆண்டுகளுக்கு முன்பே காசிக்கு சென்று, சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரி முனிவராக மாறியுள்ளேன். 25 ஆண்டுகளாகவே உணவு சாப்பிடவில்லை. தண்ணீர் கூட குடிக்கவில்லை. அகோரியாக மாறி சாகா வரம் பெற்றுள்ளேன். நான் 24 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டேன். தற்போது பல பிறவிகள் எடுத்து மீண்டும் உயிருடன் இருக்கிறேன். கடவுளின் உத்தரவின்பேரில் இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வந்தேன். அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கோவில் திருப்பணி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். நேற்று முன்தினம் இரவு சிவபெருமான் எனக்கு ஒரு உத்தரவு வழங்கினார். அதன்படி நாட்டில் பல்வேறு கொடிய நோய்கள் பிணிக்கு ஆளாகி மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மேலும் வறட்சியும் நிலவுகிறது. மக்கள் நோயின்றி வாழவும், அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்காக 9 நாட்கள் இந்த குழிக்குள் தவம் இருக்கப்போகிறேன். தற்போது தவம் இருக்க தொடங்கினால், தீபாவளிக்கு முந்தைய நாள் உயிருடன் வெளியே வருவேன்.

இவ்வாறு அவர் கூறிவிட்டு, அந்த குழிக்குள் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டார்.

இதற்கிடையே அகோரி ஒருவர் ஜீவசமாதி ஆக போகிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாரை சாரையாக மொட்டனூத்துவில் அகோரி இருக்கும் இடத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த அகோரியிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழிக் குள் பூமிபூஜை செய்யக்கூடாது என்றும், அதற்கு அரசு அனுமதி இல்லை என்றும் வெளியே வரும்படி கூறினர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு குழிக்குள் இருந்து அகோரி சொக்கநாதர் வெளியே வந்தார். பின்னர் அவர் ஜீவசமாதி ஆக போவதாக கூறிய குழியின் அருகிலேயே சிவன் மற்றும் நந்தி சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய போவதாக கூறி அங்கே அமர்ந்து கொண்டார்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களின் வருகை அங்கு அதிகமாக இருப்பதாலும், மீண்டும் அந்த அகோரி குழிக்குள் இறங்கிவிடாமல் தடுப்பதற்காகவும் மொட்டனூத்துவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்