நடப்பாண்டு குறுவை பருவத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் கொள்முதல்

நடப்பாண்டு குறுவை பருவத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1½ லட்சம் டன்னை தாண்டி உள்ளது.

Update: 2020-11-05 02:22 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். வழக்கமான தேதியில் தண்ணீர் திறந்து விட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்ததால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 35 சதவீதம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது குறுவை அறுவடை இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறுவை அறுவடை செய்யப்பட்ட நெல்லை தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து வருகிறது.

299 கொள்முதல் நிலையங்கள்

மேலும் இந்த ஆண்டு குறுவையில் எக்டேருக்கு சராசரியாக 6 டன் மகசூலை தாண்டி 6.2 டன் மகசூல் கிடைத்தது. குறுவைக்காக தஞ்சை மாவட்டத்தில் 299 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன. எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்றதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் அறுவடை செய்யப்பட்டது. இதனால் கொள்முதல் நிலையங்களிலும் நெல் குவியல், குவியலாக காணப்பட்டது.

வழக்கமாக குறுவையில் தனியாரும் அதிக அளவு நெல் கொள்முதல் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு தனியார் நெல் கொள்முதல் பெரிய அளவில் இல்லை. விவசாயிகளும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விற்பனை செய்தார்கள். நடப்பு கொள்முதல் பருவம் கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.

1½ லட்சம் டன்

தஞ்சை மாவட்டத்தில் 299 கொள்முதல் நிலையங்கள் மூலம் கடந்த 1 மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 58 ஆயிரத்து 832 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு பருவத்தில் குறுவை சாகுபடியில் மட்டும் இவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக குறுவை பருவத்தில் அதிக பட்சமாக 50 ஆயிரம் டன் வரை தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) சிற்றரசு கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் 1 லட்சத்து 58 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 299 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உச்சகட்ட நெல்கொள்முதலின் போது தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 9 ஆயிரம் டன் வரை கொள்முதல் செய்யப்பட்டது.

98 சதவீதம் நிறைவு

தற்போது 2 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் 15 ஆயிரம் டன் வரை நடப்பு பருவத்தில் குறுவை கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறுவை பருவத்தில் 98 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது”என்றார்.

மேலும் செய்திகள்