கர்நாடகத்தில் “லவ் ஜிகாத்”தை தடுக்க சட்டம் கொண்டு வருவது அவசியம் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி

கர்நாடகத்தில் “லவ் ஜிகாத்“தை தடுக்க சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று மந்திரி ஆர்.அசோக் கூறினார். வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

Update: 2020-11-04 21:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் “லவ் ஜிகாத்“ என்ற பெயரில் திருமணங்கள் நடக்கின்றன. இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து மதம் மாற்றம் செய்ய முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் உடைகள் வழங்கும் கும்பல்கள் கர்நாடகத்தில் உள்ளன. இந்த லவ் ஜிகாத்தில் விழுந்து வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை பாதுகாக்கவும், லவ் ஜிகாத்தை தடுக்கவும் புதிய சட்டத்தை கொண்டு வருவது அவசியம்.

ஆர்.ஆர்.நகரில் அதிக எண்ணிக்கையில் இருந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். இதனால் அந்த தொகுதியில் ஓட்டு சதவீதம் குறைந்துவிட்டது. காங்கிரசார் அதிகளவில் வந்து வாக்களிக்கவில்லை. பாரம்பரிய மற்றும் பா.ஜனதாவினர் வந்து வாக்களித்துள்ளனர். அதனால் ஆர்.ஆர்.நகரில் பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா குறைந்தது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

குசுமா தனது மகளை போன்றவர் என்று டி.கே.ரவியின் தாயார் கவுரம்மா கூறியுள்ளார். டி.கே.சிவக்குமார் அவரிடம் இருந்து இவ்வாறு கூறுமாறு கேட்டு அந்த கருத்தை பெற்றுள்ளார். இது டி.கே.சிவக்குமாரின் மாயாஜாலம். ஊடகங்கள் முன் தோன்றி கவுரம்மா தனது இந்த கருத்தை கூறியிருக்க வேண்டும். ஆயினும் அவரது குடும்பத்தில் மாமியார்-மருமகள் இடையே உள்ள பிரச்சினைகள் நீங்கி நன்றாக இருக்கட்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்