சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் திட்டம் - போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கிவைத்தார்.
சென்னை,
சென்னையில் 136 போலீஸ் நிலையங்களும், 35 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த போலீஸ் நிலைய எல்லைகளில் 355 ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு அவற்றின் நடமாட்டம் பற்றியும் கண்காணிக்கப்படுகின்றன. சில ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரோந்து வாகனங்கள் மூலம் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் புதிய திட்டம் ஒன்று சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்று புகார் கொடுக்க முடியாத பொதுமக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். வீடு தேடிச்சென்று பொதுமக்களுக்கு உதவி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் இந்த புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு இடத்திலும், மாலை 3 மணியில் இருந்து 5 மணி வரை இன்னொரு இடத்திலும் ரோந்து வாகனங்கள் நின்றிருக்கும்.
பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் மனுக்களை அந்த ரோந்து வாகனங்களில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்களிடம் கொடுக்க வேண்டும். உடனடியாக தீர்க்கப்படும் குறைகளாக இருந்தால் அங்கேயே தீர்த்து வைக்கப்படும். உயர் அதிகாரிகள் மூலம் தீர்க்கப்படும் குறைகளாக இருப்பின் அந்த புகார் மனுக்களுக்கு சி.எஸ்.ஆர். ரசீது கொடுக்கப்படும். பின்னர் அந்த மனுக்கள் போலீஸ் நிலையங்களில் உரிய உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய நடவடிக்கை எடுக்கும் போது, புகார் கொடுத்தவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். 248 ரோந்து வாகனங்கள் இந்த பணிக்காக பயன்படுத்தப்படும். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், கண்ணன், தினகரன், அருண், தேன்மொழி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.