மாவட்டம் முழுவதும் சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

வருகிற 10-ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-11-04 22:45 GMT
தூத்துக்குடி,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச்25-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் அன்று முதல் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த அக்.31-ஆம் தேதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி வருகிற 10-ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. தூசு படிந்துள்ள இருக்கைகளை சுத்தம் செய்தல், மேலும் பழுதான இருக்கைகளை சரி செய்தல், சுகாதார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தியேட்டர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகின்ற நிலையில் 10-ஆம் தேதியே தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுபோல் தீபாவளி பண்டிகைக்கு முன்பே தியேட்டர்கள் திறக்கப்படுவதால் தீபாவளி அன்று புதிய படங்களை பார்க்கும் ஆவலில் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று கோவில்பட்டி, ஆத்தூர், திருச்செந்தூர், உடன்குடி, ஆறுமுகநேரி, விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள சினிமா தியேட்டர்களில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்