வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. பொதுதொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலையில், தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கக்கோரி சி.ஐ.டி.யு. பொதுதொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
உடுமலை,
உடுமலை நகராட்சி பகுதியில் தெருவோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தெருவியாபாரிகள் சட்டம் 2014-ஐ அமல்படுத்த வேண்டும்.
உடுமலை நகராட்சி பகுதி முழுவதும் தெருவோரம் வியாபாரம் செய்கிறவர்களை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கு தொழில் செய்ய தொழில் கடனை கூடுதலாக வழங்க வேண்டும்.
அவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கி வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. உடுமலை தாலுகா பொதுதொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்திற்கு தெருவோர வியாபாரிகள் விற்பனை குழு உறுப்பினர் என்.பாபு தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், பொதுத்தொழிலாளர் சங்கத்தலைவர் வெ.ரங்கநாதன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கே.பாலதெண்டபாணி, கி.கனகராஜ், வி.விஸ்வநாதன், சுதாசுப்பிரமணியம் உள்பட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பலர்கலந்து கொண்டனர்.