உடுமலையில் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

உடுமலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மழைத்தண்ணீருடன் கழிவுநீரும் வெளியேறி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2020-11-04 06:09 GMT
உடுமலை, 

உடுமலை நகராட்சி பகுதி 7.41 சதுர கி.மீ.பரப்பளவு கொண்டது. இங்கு 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதைத்தொடர்ந்து பாதாள சாக்கடைத்திட்டத்தில் வீட்டுக்கழிவுநீர் வெளியேறும் வகையில் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கழிவுநீர் பிரதான குழாய் மூலம் உடுமலை ஏரிப்பாளையத்தை அடுத்து கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு அந்த நீர் அருகில் உள்ள ஓடை வழியாக சென்று தென்னை போன்ற விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சரியான பராமரிப்பு இல்லை

இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரியாக பராமரிப்பு இல்லாமல், ஒரு சில எந்திரங்கள் பழுதடைந்திருப்பதாகவும், செயல்பாடுகள் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் புல்செடிகள் வளர்ந்துள்ளது.

இந்த நிலையில் உடுமலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மழைத்தண்ணீர் தேங்கிநிற்கிறது. அத்துடன் கழிவுநீர் தொட்டிகள் நிறைந்து கழிவுநீர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் வளாகம் மழைத்தண்ணீருடன், கழிவுநீரும் கலந்த நிலையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீருடன் மழைத்தண்ணீர், இந்தநிலையத்தில் உள்ள சுற்றுச்சுவர் பகுதியின் கீழ் துவாரம் வழியாக வெளியேறி சாலையோரம் உள்ள பள்ளம் நிறைந்தபடி செல்கிறது.

இந்த சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் உள்ள மின்சாரடிரான்ஸ்பர்மர் பகுதியையும் கழிவுநீர் மற்றும் மழைத்தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரியாக பராமரிக்கவேண்டும் என்றும், கழிவுநீர் நேரடியாக வெளியேறாதபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

60 மி.மீ.மழை

உடுமலையில் நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. 60மி.மீ.மழை பதிவாகியிருந்தது. பலத்தமழையால் நகராட்சி பகுதியில் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிறைந்து மழைத்தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியது.

மேலும் செய்திகள்