எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை என்று புகார்: ஊராட்சிக்குழு கூட்டத்தில் இருந்து மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு
எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை என்று புகார் தெரிவித்து தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாக மன்ற கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி, மாவட்ட ஊராட்சி செயலாளர் சோழன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட ஊராட்சி அலுவலக கண்காணிப்பாளர் அனந்தராம விஜயரங்கன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் பேசுகையில், சிறப்பாக பணியாற்றியதற்காக தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை நேரில் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், கலெக்டர், திட்ட இயக்குனர் ஆகியோருக்கு மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் முருகன் (தி.மு.க.), சரவணன், சி.வி.மாது (பா.ம.க.), குமார் (தே.மு.தி.க.) ஆகியோர் பேசுகையில், மாவட்ட ஊராட்சிக்குழு மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தீர்மான புத்தகத்தில் என்னென்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். அந்த தீர்மான புத்தகத்தை மாவட்ட கவுன்சிலர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலராக நாங்கள் தேர்வு செய்த பிறகு எந்த வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை. ஒரு சில வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நிதியும் வழங்கப்படாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் எங்களை கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே எங்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
இதற்கு அதிகாரிகள் பதில் தெரிவித்ததால் தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்களிடம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.