சீன பட்டாசுகள் வரத்தை தடுக்க சென்னையில் 8-ந்தேதி வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் விக்கிரமராஜா பேட்டி

சீன பட்டாசுகள் வரத்தை தடுக்க வருகிற 8-ந் தேதி சென்னையில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கோபியில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.;

Update: 2020-11-04 04:33 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூரில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 8-ந் தேதி சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், சீன பட்டாசுகள் வரத்தை தடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகை காலங்களில் கொரோனா ஆய்வு என்ற பெயரில் கடைகளுக்கு அபராதம் விதிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

விலை உயர வாய்ப்பு

வேளாண் சட்டத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் அந்த பொருட்களின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளுடன், இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராடும்.

அதுமட்டுமின்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களை ஒன்று திரட்டி டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தியமங்கலம்

பின்னர் சத்தியமங்கலத்துக்கு விக்கிரமராஜா சென்றார். அவரை சத்தியமங்கலம் கிளை சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.ஜவகர் வரவேற்றார். இதையொட்டி அங்கு சங்க கொடி ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், 6 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடியை தாண்டி ஜி.எஸ்.டி. மூலம் வருமானம் கிடைத்து உள்ளது. இந்த வருமானத்தை வியாபாரிகளுக்கு ஒரு ஆண்டுக்கு வட்டியில்லா கடனாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும்.

போராட்டம்

சத்தியமங்கலத்தில் உள்ள ஓட்டல்களில் சாப்பிட்ட எச்சில் இலைகளை தீபாவளிக்கு பிறகு நகராட்சி நிர்வாகம் எடுக்காது. அவைகளை ஓட்டல் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

நகராட்சி நிர்வாகமே எச்சில் இலைகளை எடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு அளவில் மிகப்பெரிய போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம். அதுமட்டுமின்றி வியாபாரிகளை மிரட்டி கடைகளை அடைக்க சொல்வதையும், திடீர் கடையடைப்பு செய்வதையும் நாங்கள் கண்டிக்கிறோம்,’ என்றார். இந்த நிகழ்ச்சியில் நாகராஜ், சிவகுமார், ஜேவிஆர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்