தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாறும் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை
தஞ்சையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை மாறி வருகிறது. இங்கு நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3 மாடிகளிலும் ஓவியங்கள், தரைதளம் சீரமைப்பு, சிறுவர்களுக்கு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை நகரின் மைய பகுதியில் பழைய பஸ் நிலையம், பெரியகோவிலுக்கு இடையே 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மருத்துவப்பள்ளியும் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
முன்பு இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகள் தொடங்கப்பட்ட பின்னர் தற்போது இங்கு மகப்பேறு, குழந்தைகள் நலப்பகுதி, கண் சிகிச்சை பகுதி, சித்த மருத்துவ பகுதி, காசநோய் பிரிவு ஆகியவை மட்டும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புறநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
அதிக பிரசவம்
தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளுள் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். இங்கு ஆண்டுக்கு 1½ லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இந்த மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக வருவர்.
இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக பல்வேறு வார்டுகள் இருந்த போதிலும் குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்காக 3 மாடிகள் கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மோசமாக காணப்பட்டது. அதன்படி இதனை சரி செய்ய அரசு ரூ.45 லட்சம் ஒதுக்கியது. மேலும் நடிகை ஜோதிகா, சூர்யாவின் அகரம் பவுண்டேசன் ரூ.25 லட்சம் வழங்கியது. அதன்படி தற்போது ரூ.70 லட்சத்திற்கும் மேல் இந்த மருத்துவமனையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனியாருக்கு இணையாக.....
குறிப்பாக சிறுவர்களுக்கான படுக்கை வசதிகள், தரைதளம் சீரமைப்பு, சுவர்களில் இயற்கை காட்சிகள், விலங்குகள், பறவைகளின் ஓவியங்கள் போன்றவை வரையப்பட்டுள்ளது. உயிர் காக்கும் நவீன மருத்துவ உபகரணங்களும் வாங்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனைக்கு இணையாக மாறி உள்ளது.
தரைதளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் நிலைப்படுத்துதல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 7 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தரமான படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, மானிட்டர் வசதி மற்றும் பல்வேறு உபகரணங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுவர்களில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
ரூ.70 லட்சம்
இது குறித்து ராசாமிராசுதார் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி உஷாதேவி கூறுகையில், “அகரம் பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பூங்காவும் மேம்படுத்தப்பட்டு பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பூங்கா ஏற்கனவே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. தற்போது கூடுதலாக பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அதிகாரி சண்முகம், இந்த மருத்துவமனையை மேலும் மேம்படுத்த அரசு சார்பில் ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அந்த நிதியின் மூலம் கட்டிடம் சீரமைப்பு, தரைதளம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் 3 மாடிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன”என்றார்.