வேளாங்கண்ணி பேராலயத்தில் மத நல்லிணக்க யாத்திரை குழுவினர் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு
வேளாங்கண்ணி பேராலயத்தில் மத நல்லிணக்க யாத்திரை குழுவினர் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்கள் பிரார்த்தனை செய்து விட்டு திரும்பி சென்றனர்.
வேளாங்கண்ணி,
தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாத்திரை நடத்தி மத நல்லிணக்க கருத்துகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையிவ் அதன் மாநில தலைவர் வேளூர் எம்.இப்ராகிம் தனது யாத்திரை குழுவினருடன் வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் மற்றும் மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் மாவட்ட பொது செயலாளர் குமரன், ஒன்றிய தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் உமாபதி, ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன்மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் வேளாங்கண்ணி பகுதிகளில் கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
பிரசாரம் செய்ய தடை
வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் நல்லிணக்க குழுவினர் பிரசாரம் செய்ய போலீசார் தடை விதித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் பேராலயத்துக்குள் சென்று பிரார்த்தனை மட்டும் செய்கிறோம் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் சார்பிலும், பாரதீய ஜனதா கட்சி சார்பிலும் சேர்ந்து 5 பேர் மட்டுமே பேராலயத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்து விட்டு திரும்பி சென்றனர்.
நாகூர்
இதேபோல தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் மாநில தலைவர் இப்ராஹிம் சார்பில் நடத்தப்பட்ட மதநல்லிணக்க யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகூர் தர்கா வாசலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகூர் முஸ்லிம் ஜமாஅத் முன்னாள் தலைவர் நிஜாமுதீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் ஜபருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொறுப்பாளர் சதத்துல்லா, தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் சிறுபான்மை குழு மாநில ஒருங்கிணைப்பாளர் நெளஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் நாடு ஏகத்துவ ஜமாத் அரசியல் சமுதாய பேரியக்கம் மாநில தலைவர் இப்ராஹீம் நாகூர் தர்காவிற்கு வர கூடாது என கோஷங்கள் எழுப்பப்பட்டன. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.