மாடு குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்த டிப்ளமோ என்ஜினீயர் லாரி மோதி சாவு
திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாடு குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்த டிப்ளமோ என்ஜினீயர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் அஜித்குமார் (வயது 26). டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ள இவர், திருச்சி விமான நிலையம் அருகில் தங்கியிருந்து குண்டூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை 8 மணி அளவில் இவர் தனது வீட்டிலிருந்து வேலை செய்யும் நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விமான நிலையம் அருகே சென்றபோது ஒரு மாடு குறுக்கே வந்தது. இதனால் மாடு மீது மோதாமல் இருக்க அஜித்குமார் பிரேக் பிடித்தார்.
பெற்றோர் கதறல்
அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி அஜித்குமார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலை விபத்தில் இறந்த மகனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.