பொம்மநாயக்கன்பட்டியில் பள்ளி கட்டிடம் கட்டக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
பொம்மநாயக்கன்பட்டியில் பள்ளி கட்டிடம் கட்டக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தோகைமலை ஒன்றியம், கூடலூர் ஊராட்சி, பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1.81 ஏக்கர் நிலத்தை நடைபாதை பாத்தியத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு தானமாக அளித்து பொம்மாநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும்படி கோரிக்கை வைத்தோம். ரூ.1 லட்சம் டெபாசிட்டும் செய்துள்ளோம்.
எங்களது கோரிக்கையின் அடிப்படையில் நடுநிலைப்பள்ளியானது, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகளாக வேப்ப மரத்தடியில் வகுப்பறை செயல்பட்டு வருகிறது. இன்னும், பள்ளியை விரிவாக்கம் செய்து கட்டிடம் கட்டப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கட்டிடம் கட்ட கோரிக்கை
ஆகவே, பள்ளிக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோன்றிமலை போலீசார் மற்றும் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பள்ளி கட்டிடம் குறித்து கோரிக்கை மனு அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கறிக்கோழி பண்ணையாளர்கள் மனு
கரூர் மாவட்ட கறிக்கோழி பண்ணையாளர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலத்தில் உள்ள புகார் பெட்டியில் செலுத்திய மனுவில்,
கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்யும் பண்ணை விவசாயிகள், கோழிகளை வளர்க்க ஒரு கிலோவுக்கு ரூ.11 வரை செலவு செய்கின்றனர். ஆனால், நிறுவனங்களோ ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.4 முதல் ரூ.6 வரை மட்டுமே பண்ணை விவசாயிகளுக்கு கூலியாக கொடுக்கின்றனர். எனவே, பண்ணையாளர்கள் 10 ஆயிரம் கோழி வளர்ப்பிற்கு ஒரு பேட்ஜ்க்கு ரூ.ஒரு லட்சம் முதல் 1½ லட்சம் வரை நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
ஆகவே, தீபாவளி மற்றும் பண்டிகை நேரங்களில் கறிக்கோழி தடைபடாமல் கிடைக்க நிறுவனங்கள் கிலோவுக்கு ரூ.12 என அறிவித்து நடைமுறைப் படுத்த வேண்டும் என கரூர் மாவட்ட கோழி பண்ணையாளர்கள் நலச்சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.