குளத்தை காணவில்லை; கண்டுபிடித்து தரக்கோரி மனு

குளத்தை காணவில்லை, அதனை கண்டுபிடித்து தரக்கோரி உதவி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2020-11-04 01:14 GMT
நச்சலூர், 

குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூரை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் நேற்று உதவி கலெக்டர் சேக் அப்துல் ரகுமானிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-

கரூர் மாவட்டம், பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூர் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குளம் ஒன்று இருந்தது. 2½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்து நீரினால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. பொது மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம், தனி ஒருவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாக மாற்றி உள்ளனர். தற்போது குளம் இருந்ததற்கான சுவடே தெரியாத அளவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. குளத்தையும் காணவில்லை. இதனால், இந்த பகுதியில் உள்ள விளை நிலங்கள் நீர் ஆதாரம் இன்றி விவசாயிகளும், போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மீட்க வேண்டும்

ஆகவே, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்