பெரம்பலூர், அரியலூரில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-04 00:21 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், ஏற்கனவே 2 ஆயிரத்து 152 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணம் அடைந்த 2 ஆயிரத்து 101 பேர் வெவ்வேறு நாட்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 21 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 30 பேர் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்ட மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவர், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதகளில் 2 பேர், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவர் என 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று 4,032 பேர் வீடு திரும்பியுள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மொத்தம் 383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 74 ஆயிரத்து 979 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்