காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம்: மகள்-மகனை கொன்று விதவை பெண் தற்கொலை
காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் மகள்-மகனை கொன்று விதவை பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.;
மண்டியா,
மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா போரபுரா கிராமத்தை சேர்ந்தவர் சோமா. இவருடைய மனைவி நேத்ராவதி (வயது 30). இந்த தம்பதியின் மகள் சோபிதா (9), மகன் நந்தீஷ் (7). இந்த நிலையில் சோமா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் நேத்ராவதி தனது மகன் மற்றும் மகளுடன் அந்த கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, நேத்ராவதி தனது மனதை கல்லாக்கிக் கொண்டு தனது மகள் மற்றும் மகனுக்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினார்கள். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் நேத்ராவதி, சோபிதா, நந்தீஷ் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், இதுதொடர்பாக கே.எம்.தொட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவரை இழந்து மகள்-மகனுடன் தனியாக வசித்து வந்த விதவை பெண்ணான நேத்ராவதிக்கு அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், அவருடைய காதலனான வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நேத்ராவதி தனது மகள் சோபிதா, மகன் நந்தீஷ் ஆகியோருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து கே.எம்.தொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.