வடபழனியில் தறிகெட்டு ஓடியதால் பரபரப்பு: லாரி மீது மோதி கார் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர் பலி - அண்ணன் கண் எதிரே பரிதாபம்

வடபழனியில் தறிகெட்டு ஓடிய கார், சாலையோரம் நின்ற லாரி மீது மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அண்ணன் கண் எதிரேயே கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-11-03 21:30 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூனுஸ். சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன்கள் முகமது ஆசிக் (வயது 24), முகமது வாசிம் (20). இவர்களில் முகமது வாசிம், மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பி இருவரும் அசோக்நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை முகமது வாசிம் ஓட்டினார். அருகில் அவரது அண்ணன் முகம்மது ஆசிக் அமர்ந்து கொண்டிருந்தார்.

வடபழனி 100 அடி சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த மொபட், ஆட்டோ மற்றும் லாரியின் மீது மோதியதுடன், அதே வேகத்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. கார் மோதியதில் மொபட், ஆட்டோவும் சேதமடைந்தது.

இதில் காரை ஓட்டி வந்த முகமது வாசிம் படுகாயம் அடைந்து, அண்ணன் கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன் முகமது ஆசிப் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான முகமது வாசிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த காரையும் அப்புறப்படுத்தினார்கள். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்