ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் 8 கிலோ கஞ்சா கடத்தல்; 2 வாலிபர்கள் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் கடத்த முயன்ற 8 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 2 வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை போலீசார் முழுமையாக சோதனை செய்த போது அதில் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில், இந்த கஞ்சா பொட்டலங்கள், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை பூந்தமல்லி போரூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய புதுச்சேரி மாநிலம் மரப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 24) மற்றும் விஜய் (23) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதேபோல் திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் பாரதிதாசன் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த கோணிப்பையுடன் ஓட்டம் பிடித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வைத்திருந்த கோணிப்பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 40 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த அவற்றை பறிமுதல் செய்து, திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த தேவராஜ் (52) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.