தூத்துக்குடியில் ‘குப்பையின் மறுபக்கம்’ குறும்படம் - கனிமொழி எம்.பி. வெளியிட்டார்

தூத்துக்குடியில் ‘குப்பையின் மறுபக்கம் குறும்படத்தை’ கனிமொழி எம்.பி. நேற்று வெளியிட்டார்.

Update: 2020-11-03 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் குப்பையின் மறுபக்கம் என்ற குறும்படம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு படத்தின் உதவி இயக்குநரும், ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளருமான சோ.அருந்ததி அரசு தலைமை தாங்கினார். குறும்படத்தின் இயக்குநர் பிராட்வே எஸ்.சுந்தர் குறும்படம் குறித்து விளக்கினார். மூத்த வக்கீல் செங்குட்டுவன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார். நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றிய பாக்கியலட்சுமி என்பவர் கடந்த நான்கு மாதத்துக்கு முன்பாக குப்பைகளை தரம் பிரித்து போது இயந்திரத்தில் சிக்கி அவரின் கை துண்டானது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்த குறும்படம் குப்பையின் மறுபக்கம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமிக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசும் போது, தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்கள் கையுறை, முகக்கவசம், காலுறை, பூட்ஸ் போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றுகின்றனர். நெல்லையில் ஒரு தூய்மை பணியாளர் கை துண்டாகியுள்ளது மிகவும் கொடுமையானது. அவருக்கு முறையான பயிற்சி அளிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என கூறுகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு முறையான பயிற்சியை கூட இந்த அரசு அளிப்பதில்லை. பணியின் போதே 600 முதல் 700 தூய்மை பணியாளர்கள் இறந்து உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்