மாமூல் கேட்டு இறைச்சி கடைக்காரருக்கு சரமாரி கத்தி வெட்டு ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளிகளா? போலீசார் விசாரணை

சத்துவாச்சாரியில் மாமூல் கேட்டு இறைச்சி கடைக்காரரை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர். அவர்கள் ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளிகளா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-03 06:17 GMT
வேலூர், 

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 38). இவர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் அருகே இறைச்சி கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று மதியம் 12 மணி அளவில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களை வசூர் ராஜாவின் கூட்டாளிகள் எனக்கூறி மாமுல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் சாதிக்பாஷாவுக்கும், அவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாதிக்பாஷாவை சரமாரியாக வெட்டினர். அப்போது அவர் உயிர் பயத்தில் கூச்சலிட்டார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அங்கிருந்தவர்கள் சாதிக்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வசூர் ராஜா கூட்டாளிகளா?

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஏற்கனவே இந்த கும்பல் சாதிக்பாஷாவிடம் பலமுறை பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் இறைச்சிக்கடைக்காரரை மிரட்டி பணம் கேட்டு சரமாரியாக வெட்டிய சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சாதிக்பாஷாவை கத்தியால் வெட்டிய மர்மநபர்கள் தங்களை ரவுடி வசூர்ராஜாவின் கூட்டாளிகள் என்று கூறி உள்ளனர். அவர்கள் உண்மையில் வசூர்ராஜாவின் கூட்டாளிகளா? என்று இப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்