ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்கள் 240 பேருக்கு மருத்துவ பரிசோதனை

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 240 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2020-11-03 05:48 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க முன் கள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மருத்துவ முகாம்

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ முகாம் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகளை வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் கருதாமல் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணியாளர்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து பணிபுரிய வேண்டும் என்றார்.

240 பேருக்கு பரிசோதனை

முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு வெளிநோயாளிகள் சீட்டு வழங்கப்பட்டது. அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி தென்பட்டவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் அவர்களது எடை பரிசோதிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு மருந்து, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஸ்கேன் எடுக்கும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. முகாமில் தூய்மை பணியாளர்கள் 240 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்