கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

கல்லறை தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

Update: 2020-11-03 05:16 GMT
காளையார்கோவில்,

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்களது மறைந்த முன்னோர்களின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். கல்லறை தினமான அன்று முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்காரம் செய்து மாலைகள் அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி மறைந்த முன்னோர்களை வழிபடுவார்கள். இதையடுத்து இந்தாண்டு நேற்று கிறிஸ்தவர்கள் கல்லறை தினத்தை அனுசரித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் அனுசரித்தனர்.

மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை

முன்னதாக அந்தந்த கிறிஸ்தவ ஆலயங்களில் பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை புனித கார்மேல் கிறிஸ்தவ ஆலயத்தில் மறை மாவட்ட நிர்வாகி அருட்தந்தை பாக்கியநாதன் தலைமையில் மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு இணைந்து சிறப்பு திருப்பலி நடத்தினர். தொடர்ந்து சிவகங்கை காமராஜர் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைஆரோக்கியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன் பின்னர் காளையார்கோவிலில் உள்ள மதுரை-தொண்டி நெடுஞ்சாலை பஸ் நிலையம் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

காரைக்குடி, தேவகோட்டை

இதேபோல் காளையார்கோவில் அருகே ஆண்டியூச்சிரணி புனித அடைக்கல மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை தைரியநாதன் தலைமையிலும், சாத்தரன்பட்டி புனித பனிமய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ஜோசப் தலைமையிலும், சூரம்பட்டியில் புனிதங்ஞாசியார் ஆலயத்தில் ஆனந்தா கல்லூரி முதல்வர் அருட்தந்தை வசந்த் தலைமையிலும், வலையம்பட்டி புனித ஜெபஸ்தியார் ஆலயத்தில் அருட் தந்தை சூசைஆரோக்கியம் தலைமையிலும், மருதகண்மாய் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் அருட்தந்தை ஸ்டானி தலைமையிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அந்தந்த பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராயன் தலைமையிலும், செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத் தந்தை சகாயராஜ் தலைமையிலும், தளக்காவூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் மற்றும் மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரால்டுஜோசப் தலைமையிலும், காரைக்குடியை அடுத்த ஆவுடைப்பொய்கை புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேசுராஜ், ஆனந்தா கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஜான்வசந்தகுமார் ஆகியோர் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அந்தந்த பகுதியில் உள்ள கல்லறையில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

மேலும் செய்திகள்