கோவில் நிலத்தை காவல் துறைக்கு வழங்க எதிர்ப்பு: திருப்பூரில் 5 கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருப்பூர் ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை காவல் துறைக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து 5 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீரபாண்டி,
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டு பழமையான புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 11.16 ஏக்கர் நிலம் கோவில் அருகில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 2 வாரம் நடைபெறுவது வழக்கம். அப்போது இந்த இடத்தில்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவில், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர் புதூர் ஆகிய 5 கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலம் 11.16 ஏக்கரில், 9 ஏக்கர் நிலம் காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவில் நிலம் காவல் துறைக்கு வழங்கப்பட்ட விவரம் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோவில் நிலத்தை காவல் துறைக்கு வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோவில் பயன்பாட்டுக்கு நிலம் வேண்டும், கோவில் நிலத்தை காவல் துறைக்கு வழங்கக்கூடாது என 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையில் கோவில் நிலத்தை கோவிலுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலை பெரியாண்டிபாளையம் பிரிவில் 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சாலை ஓரம் அமர்ந்து, முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில் வேல், தமிழ் மாநில காங்கிரஸ் ரவிக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆண்டிபாளையம், பெரியாண்டிபாளையம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
சாலை மறியல்
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சாலை மறியலை கைவிட பொதுமக்கள் மறுத்து விட்டனர். தொடர்ந்து 2 மணி நேரம் சாலையின் நடுவே அமர்ந்து கோவில் நிலங்களை மீட்டு தரவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆதார் அட்டையைஒப்படைப்போம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் ஆகியோர் வந்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின்போது “எந்த காரணத்தை கொண்டும் கோவில் நிலங்களை விட்டு கொடுக்க போவதில்லை. கோவில் நிலத்தை மீட்கும்வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை கலெக்டரிடம் ஒப்படைப்போம்” என்றனர்.
அதிகாரிகள் தரப்பில் “வருகிற 4-ந் தேதி (நாளை) முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாகவும், அதன்மூலம் விரைவில் தீர்வு காணப்படும்” என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.