நெல்லை கலெக்டர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகை மீண்டும் வேலை வழங்க கோரிக்கை

கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மீண்டும் வேலை வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-11-03 03:22 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா காலத்தில் கொரோனா தடுப்பு தன்னார்வலர்களாக செவிலியர்கள் பலர் பணியாற்றினார்கள். அவர்கள் தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அந்த செவிலியர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தொற்றால் பாதிப்பு

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாங்கள் 60-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தன்னார்வ அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தோம்.

தற்போது எங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வர வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம். இதில் சிலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

வேலை வழங்க வேண்டும்

எங்களுக்கு சரியான ஊதியம் கிடைக்காத நிலையிலும் பணியை சிறப்பாக செய்து வந்தோம். இந்த நிலையில் எங்களை முன்னறிவிப்பு இன்றி வேலையை விட்டு நீக்கியதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி, கருணை அடிப்படையில் மீண்டும் வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்