காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5½ லட்சம் நலத்திட்ட உதவிகள் மாவட்ட கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதியதாக பதவியேற்ற மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட முதுகுத்தண்டுவடம் பாதித்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய நாற்காலிகளை வழங்கினார்.
காசோலைகள்
மேலும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதன்பின்னர் அவர், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) யோகலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.