புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் ஈரோட்டில் விக்கிரமராஜா பேட்டி

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

Update: 2020-11-03 02:04 GMT
ஈரோடு, 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவிஏற்பு விழா மற்றும் ‘உழவர் வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய வேளாண் சட்டங்கள்‘ என்ற நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. புத்தக ஆசிரியரும், மாவட்ட தலைவருமான ஆர்.கே.சண்முகவேல் வரவேற்று பேசினார்.

பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். அதை, தி.மு.க. விவசாய அணி மாநில இணைச்செயலாளர் குறிஞ்சி சிவகுமார் பெற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வெங்காயம், உருளை கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும். இல்லையேல் இதுபோன்ற ஒவ்வொரு விளை பொருளின் விலையும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால், விளை பொருட்களின் விலை நிர்ணயம், தனி நபர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுவிட்டன. இந்த சட்டத்தால், பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள். விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள். எனவே விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து வணிகர் சங்கத்தினரும், வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடுவோம்.

பொது சுத்திகரிப்பு நிலையம்

கடந்த 8 மாதமாக கொரோனா பாதிப்புக்கு பின்பு தற்போது பண்டிகை கால விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆய்வு என்ற பெயரில், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாசுகட்டுப்பாட்டு துறை, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசார் என பல துறையினர் கடைகளுக்குள், வணிக நிறுவனங்களுக்குள் வந்து ஆய்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு காரணம் கூறி அபராதம் விதிக்கின்றனர். கடை மீதும் பல்வேறு நடவடிக்கை, அபராதம் போன்றவற்றை விதிக்கின்றனர். இவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையேல் வியாபாரமும், வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.700 கோடியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தற்போது அதன் மதிப்பு ரூ.1,500 கோடியாக உயர்த்தப்பட்டும், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அந்த திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் ராஜ்குமார், இணைச்செயலாளர் சிவநேசன், மாவட்ட பொருளாளர் ராஜகோபால், இளைஞர் அணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், துணைத்தலைவர்கள் உதயம் பி.செல்வம், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்