தஞ்சையில், கல்லறை திருநாள் அனுசரிப்பு முன்னோர்கள் நினைவாக கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று முன்னோர்கள் நினைவாக பிரார்த்தனை செய்தனர்.
தஞ்சாவூர்,
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், திருநாளாக அனுசரிக்கின்றனர். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு இருந்தது.
தஞ்சை தூய பேதுரு ஆலய கல்லறை தோட்டத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள், இறந்த தங்கள் முன்னோர்கள் சமாதி முன்பு மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இறந்தவர்களின் ஆத்மாக்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்தனர்.
மாலையில் தூய பேதுரு ஆலயத்தில் இருந்து உதவி சபை குரு ஷியாம் நியூ பிகின் தலைமையில் ஊர்வலமாக சென்று கல்லறை தோட்டத்தை சுற்றி வந்து கிறிஸ்துவ பாடல்களை பாடினர். கல்லறைக்கு வழிபாடு செய்ய வந்தவர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
திரு இருதய பேராலயம்
தஞ்சை திரு இருதய பேராலய கல்லறை தோட்டத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், இறந்த குருக்கள் கல்லறையில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் சென்று முன்னோர்களின் சமாதி முன்பு பிரார்த்தனை செய்தனர்.
நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள புனித சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது மூதாதையர்களின் சமாதி முன்பு மலர்தூவியும், மெழுகுவர்த்து ஏற்றி வைத்தும் வழிபட்டனர். சிலர் மூதாதையர்களுக்கு பிடித்த இனிப்பு, குளிர்பானம், பிஸ்கட் போன்றவற்றை சமாதி முன்பு படைத்து வழிபட்டனர். சிலர், முன்னோர்களை நினைத்து கண் கலங்கினர்.
திருப்பலி இல்லை
புனித வியாகுல அன்னை ஆலய கல்லறை தோட்டம், மிக்கேல் சம்மனசு கல்லறை தோட்டத்தில் பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பேராலயம் சார்பில் திருப்பலி எதுவும் கல்லறை தோட்டத்தில் நடத்தப்படவில்லை. இதேபோல் தஞ்சையில் உள்ள கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்தவர்கள் பலர், இறந்து போன தங்களது உறவினர்களின் கல்லறைகளை தேடி சென்று வழிபட்டனர்.
இது குறித்து கிறிஸ்தவர்கள் கூறும்போது எங்கள் மூதாதையர்களின் நினைவை போற்றும் விதமாகவும், அவர்கள் எங்களுக்கு கற்று தந்த வாழ்வியல்களை கடைபிடிக்கும் விதமாகவும் ஆங்காங்கே உள்ள கல்லறை தோட்டங்களுக்கு வந்து வழிபாடு செய்கிறோம். எங்கள் மூதாதையர்களுக்கு பிடித்தவற்றை அவர்கள் சமாதியில் வைத்து வேண்டி கொள்கிறோம் என்றனர்.
தற்காலிக பூக்கடைகள்
கல்லறை திருநாளையொட்டி தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் தற்காலிக பூக்கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன. மெழுகுவர்த்திகளும் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக கல்லறை திருநாளையொட்டி வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து மூதாதையர்களுக்கு வழிபாடு செய்வார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக வெளியூர்களில் இருந்து பலர் வரவில்லை. எல்லா கல்லறை தோட்டத்தில் வழக்கத்தைவிட குறைவான அளவே கிறிஸ்தவர்கள் வந்திருந்தனர். முதியவர்கள் வர வேண்டாம் என பேராலயம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.