10-ம் வகுப்பு மாணவி மர்ம சாவு: போலீசுக்கு தெரியாமல் உடல் அடக்கம்
பொறையாறு அருகே மர்மமான முறையில் இறந்த 10-ம் வகுப்பு மாணவியின் உடல் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பொறையாறு,
நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருவிளையாட்டம் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாமிதுரை. இவருடைய மனைவி குமுதம். இவர் திருவிளையாட்டம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு சாமிதுரை இறந்து விட்டார். சாமிதுரையின் கடைசி மகள் திவ்யா திருவிளையாட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் இருந்து வந்தார்.
தூக்கில் பிணம்
இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது திவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் போலீசுக்கு தெரியாமல் அரும்பாக்கம் ஆற்றங்கரை இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்தநிலையில் திவ்யாவின் சகோதரர் சரத்குமார் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் தனது தங்கை திவ்யாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சரத்குமார் தன்னை ஒருவர் போலீஸ் என கூறி ரூ.30 ஆயிரம் கேட்டு மிரட்டியதாக மற்றொரு புகார் மனுவை பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்தார்.
போலீசில் புகார்
இதுகுறித்து பெரம்பூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் தரங்கம்பாடி தாசில்தார் கோமதி முன்னிலையில் திவ்யாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை டாக்டர் இளங்குமரன் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் மீண்டும் அதே இடத்தில் திவ்யாவின் உடல் புதைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சம்பவம் திருவிளையாட்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.