பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-03 01:14 GMT
நாகப்பட்டினம், 

நாகையில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தடையின்றி விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளை களைய ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தீபாவளி போனஸ்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளமும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கூலி மற்றும் ஏற்று கூலி மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வழங்க வேண்டும். சிறு, சிறு காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட கொள்முதல் பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்