15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-11-03 01:02 GMT
திருவாரூர், 

சுமை தூக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும். அக்டோபர் முதல் ஜனவரி வரை 22 சதவீத ஈரப்பதம் வைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் பணியாளர் மாத ஊதியம் ரூ.20 ஆயிரமும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் ஏற்று கூலி மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

அதன்படி நேற்று திருவாரூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், மாநில இணை செயலாளர் குணசேகரன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், நிர்வாகிகள் கலியபெருமாள், விஜயகுமார், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் நவீன அரிசி ஆலையை உடனே இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்