கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் புதுவை கவர்னர் மாளிகை, சட்டசபையை தொழிலாளர்கள் முற்றுகை-தடியடி போலீசாருடன் தள்ளுமுள்ளு

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை கவர்னர் மாளிகை, சட்டசபையை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-03 00:07 GMT
புதுச்சேரி,

பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

அரசு நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியத்தை அமைத்து, தீபாவளிக்கு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கவேண்டும். மில்களை இயங்க செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த கோரிக்கைகளுக்காக கவர்னர் மாளிகை மற்றும் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி கவர்னர் மாளிகை மற்றும் சட்டசபை முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒரு பிரிவினர் நேரு வீதி மணக்குள விநாயகர் கோவில் அருகிலேே-யும் மற்றொரு பிரிவினர் தலைமை தபால் நிலையம் முன்பும் கூடினார்கள். அங்கிருந்து அவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

ஆனால் அங்கிருந்து செல்ல அனுமதிக்காமல் தடுப்புக் கட்டைகளை அமைத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுவை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தொழிற்சங்கத்தினரில் சிலர் ஆர்ப்பாட்ட பகுதியில் இருந்து கலைந்து சென்று புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் பாரதி பூங்காவை சுற்றி சென்று கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் தொழிலாளர்கள் கவர்னர் மாளிகை நோக்கி செல்வதிலேயே குறியாக இருந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கவர்னர் மாளிகை நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.

ஆனால் போலீசாரின் தடியடியைப் பற்றி கவலைப் படாமல் தொழிலாளர்கள் கவர்னர் மாளிகையின் பிரதான வாயில் அருகே சென்று தொழிற்சங்க கொடிகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கவர்னர் கிரண்பெடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதையடுத்து அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்குள் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். கைதான அனைவரும் கோரிமேடு சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்து இருந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் ஆட்டோக்களை செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை மற்றும் கவர்னர் மாளிகை பகுதியில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தி வைத்து இருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போராட்டத்தால் கவர்னர் மாளிகை பகுதி பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்