அரசின் நலத்திட்ட பணிகளை தொய்வில்லாமல் மக்களுக்கு செய்வேன் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஸ்ரீ வெங்கட பிரியா பேட்டி
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை தொய்வில்லாமல் செய்வேன், மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய சாந்தா, திருவாரூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்தும், சேலத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குனராக பணிபுரிந்து வந்த பி.ஸ்ரீவெங்கட பிரியா பதவி உயர்வாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமித்தும் கடந்த 24-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் 14-வது புதிய கலெக்டராகவும், 2-வது பெண் கலெக்டராகவும் ஸ்ரீவெங்கட பிரியா நேற்று காலை தனது அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் பொறுப்புகளை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் ஒப்படைத்தார். புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட ஸ்ரீவெங்கட பிரியாவை கலெக்டர் அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன்
இதையடுத்து கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா நிருபர்களிடம்கூறும்போது, மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் (அனைத்து குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்) , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை தொய்வில்லாமல் செய்வேன். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை சிறப்பாக நடத்தி, பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன். அனைத்து பணிகளை விரைந்து செய்வேன். சில விஷயங்களை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அரசின் அறிவுறுத்தலின் பேரில் திட்டங்களை நிறைவேற்ற ஏற்பாடுகளை செய்வேன் என்றார்.
அரசு பள்ளியில் படித்தவர்
பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீவெங்கட பிரியா சிவகங்கை மாவட்டம் அழகாபுரியில் 14.7.1974-ல் பிறந்தார். அவர் பள்ளி படிப்பை கத்திவாக்கம் அரசு பள்ளியிலும், பி.எஸ்.சி. வேதியியல் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியிலும் படித்தார். பின்னர் ஸ்ரீ வெங்கட பிரியா 2005-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணியில் சேர்ந்து, அதனை தொடர்ந்து 2009-ம் ஆண்டில் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் 2017-ம் ஆண்டு முதல் சேலம் பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குனராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.