உயிருக்கு பயந்து தனியார் நிறுவன பஸ்சுடன் விருத்தாசலம் நீதிமன்றத்துக்கு வந்த டிரைவர்
ஊதியம் கேட்ட தன் மீது பெருந்துறை போலீசில் பொய் புகார் கூறியதால் உயிருக்கு பயந்து தனியார் நிறுவன பஸ்சுடன் விருத்தாசலம் நீதிமன்றத்திற்கு டிரைவர் வந்தார். அங்கு உணவு தராமல் கட்டிப்போட்டு சிறைவைத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(வயது 50). டிரைவர். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சை ஓட்டுவதற்கான வேலை வழங்கப்பட்டது. அங்கேயே தங்கி பஸ் ஓட்டி வந்த பரசுராமனுக்கு, அந்த நிறுவனம் கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சை அங்கிருந்து பரசுராமன் ஓட்டிக்கொண்டு விருத்தாசலத்துக்கு வந்தார். பின்னர் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அவர், நேற்று காலையில் நீதிமன்ற வளாகத்தில் அந்த பஸ்சை நிறுத்தினார். ஆனால் நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் அங்கு யாரும் இல்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த வக்கீல் அருள்குமாரிடம் பரசுராமன் மனு கொடுத்தார்.
கட்டிப்போட்டு சிறைவைப்பு
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 7 மாதங்களாக பெருந்துறையில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அந்த நிறுவனம் எனக்கு 4 மாதம் சம்பளம் தரவில்லை. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் பணிபுரிந்த நிறுவனத்தில் சம்பள பாக்கியை கேட்டபோது, அந்த நிறுவன ஊழியர்கள் 4 பேர், என்னை திட்டி, தாக்கி உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு ஒரு அறையில் சிறை வைத்தனர். அப்போது நான் அவர்களிடம் வேலை வேண்டாம், சொந்த ஊருக்கு செல்கிறேன். எனவே நான், பணியில் சேரும்போது நிறுவனத்திடம் கொடுத்த அசல் ஓட்டுனர் உரிமத்தை கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை விடுவித்து, மீண்டும் பணிக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் பணியில் இருந்தேன். அப்போது பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் தனியார் நிறுவன பஸ்சை கடத்திச் சென்றதாக புகார் வந்துள்ளது என்றும், பஸ்சை ஒப்படைத்துவிட்டு உங்களுக்கு சொந்தமான அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் சம்பளபாக்கியை வாங்கி செல்லுமாறு கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அங்கு சென்றால் பொய் புகாரின் பேரில் என்னை கைது செய்வார்கள் என்று நினைத்தும், உயிருக்கு பயந்தும் அந்த பஸ்சை ஓட்டிக்கொண்டு வந்து விருத்தாசலம் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி விட்டேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வக்கீல் அருள்குமார், பரசுராமனை விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக பரசுராமனிடம் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.