மண்டபம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1,825 கிலோ மஞ்சள் பறிமுதல்

மண்டபம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1,825 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-11-02 04:56 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் சில பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உள்ளிட்ட கியூ பிரிவு போலீசாரும், மண்டபம் காவல் நிலைய போலீசாரும் இணைந்து மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் பழுதுபார்க்கும் பணிக்காக ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகு ஒன்றில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் ஏராளமான மூடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த மூடைகளை பிரித்து பார்த்தபோது அதில் மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

மொத்தம் 73 மூடைகளில் இருந்த சுமார் 1,825 கிலோ மஞ்சளை கைப்பற்றிய போலீசார் மண்டபம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். மஞ்சள் மூடைகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் நேரில் பார்வையிட்டார். அவற்றை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக படகில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

கிலோ ரூ.1000

மஞ்சள் மூடைகளை படகில் ஏற்றி மறைத்து வைத்திருந்த நபர்கள் யார் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பன், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் அடுத்தடுத்து இலங்கைக்கு படகுகளில் மஞ்சள் கடத்தப்படும் சம்பவம் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்கள் மஞ்சள் மூடைகளை இலங்கையிலிருந்து வரும் நபர்களிடம் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக தங்கக் கட்டிகளை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 1,825 கிலோ மஞ்சளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்