தூத்துக்குடியில் பயங்கரம் புரோட்டா கடைக்காரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை 3 பேருக்கு வலைவீச்சு

தூத்துக்குடியில் புரோட்டா கடைக்காரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2020-11-02 03:03 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ஏ.சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜா. இவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-வது தெருவில் பகலில் இறைச்சி கடையும், இரவில் புரோட்டா கடையும் நடத்தி வருகிறார். இவருடைய மகன் வாழ்வாங்கி (வயது 28). இவர் தன்னுடைய தந்தைக்கு உதவியாக இறைச்சி கடை, புரோட்டா கடையை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் வாழ்வாங்கி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் புரோட்டா கடையில் விற்பனையை முடித்து விட்டு, பொருட்களை கடைக்குள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

ஓட ஓட விரட்டி...

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்தவாறு 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று வாழ்வாங்கியை அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனால் அவர் அலறியடித்தவாறு அங்கிருந்து சிறிது தூரம் தப்பி ஓடினார். ஆனாலும் வாழ்வாங்கியை ஓட ஓட விரட்டிச் சென்ற மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த வாழ்வாங்கி உயிருக்கு போராடியவாறு கிடந்தார். பின்னர் 3 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்த வாழ்வாங்கியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் லோடு ஆட்டோ டிரைவரான தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் எபனேசர் பிரசாத் என்ற பிரசாத் (30), தூத்துக்குடி டூவிபுரம் 11-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் என்ற கட்டக்காளி (38), ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த விஜி மகன் அந்தோணி வினோத் என்ற வினோத் (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து வாழ்வாங்கியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

பழிக்குப்பழியாக..

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடியில் இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 27.8.2019 அன்று தூத்துக்குடி கே.வி.கே.நகரில் சரவணன் என்ற சிந்தா சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் வாழ்வாங்கியின் அண்ணன் முத்துகுமார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முத்துகுமார், குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடியாத சிந்தா சரவணனின் ஆதரவாளர்கள், பழிக்குப்பழியாக முத்துகுமாரின் தம்பி வாழ்வாங்கியை கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

தனிப்படை

இதையடுத்து தலைமறைவான பிரசாத் உள்ளிட்ட 3 பேரையும் பிடிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிகுமார், மகராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று, தலைமறைவான 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் புரோட்டா கடைக்காரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்