பிசான சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறப்பு

பிசான சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Update: 2020-11-02 02:29 GMT
விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நேற்று நீர்மட்டம் 108.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 376.27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

பாபநாசம் அணையின் மதகினை மாவட்ட கலெக்டர் ஷில்பா திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிய தண்ணீரில் கலெக்டர் ஷில்பா, முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவினர். பின்னர் கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

1,400 கன அடி தண்ணீர்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 31-ந் தேதி வரையிலும் மொத்தம் 151 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது 1,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து கால்வாய்களும் பாசன வசதி பெற்று, விவசாயிகள் பயன்பெறுவார் கள்.

ஏற்கனவே பொதுப்பணித்துறை மற்றும் அந்தந்த பஞ்சாயத்து யூனியன்களின் மூலம் குளங்கள் தூர்வாரப்பட்டதால், அங்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்க முடியும். விவசாயிகள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அம்பை பகுதியில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களை அனுமதிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜன், மகேசுவரன், ஆதிமூலம், பாபநாசம் கீழணை நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம், பொறியாளர் சீனிவாசன், நெல்லை வேளாண்மை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், அம்பை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, சாந்தி,

அ.தி.மு.க. அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, நகர செயலாளர்கள் விக்கிரமசிங்கபுரம் கண்ணன், அம்பை அறிவழகன், மணிமுத்தாறு ராமையா, விக்கிரமசிங்கபுரம் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அருண், மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கைக்கொண்டார், மதுரா கோட்ஸ் மற்றும் அனைத்து நிறுவன தொழிலாளர்கள் சிக்கன நாணய சங்க தலைவர் இஸ்ரவேல் ஜேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணிமுத்தாறு அணை

இதேபோன்று 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நேற்று நீர்மட்டம் 75.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பழனிவேல், உதவி என்ஜினீயர்கள் கணேஷ்குமார், வினோத்குமார், அணை கண்காணிப்பாளர் காளிகுமார் ஆகியோர் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

அணையின் பெருங்கால் மதகு வழியாக 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 31-ந்தேதி வரையிலும் 151 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும் செய்திகள்