துறையூர்-திருச்சி சாலையில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி
துறையூர்- திருச்சி சாலையில் பகலில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
துறையூர்,
துறையூர் நகரின் பிரதான பகுதியான திருச்சி ரோட்டில், முசிறி பிரிவு ரோடு முதல் பாலக்கரை வரை ரோட்டின் இருபுறமும் இருசக்கர வாகனங்களால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நிறைந்த பகல் நேரங்களில் லாரிகளை சாலையோரம் நிறுத்தி அங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு சரக்குகளை இறக்குவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடும் சூழ்நிலையும் உள்ளது. அத்துடன் அந்த பகுதியில் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுகின்றது.
ஆக்கிரமிப்புகள்
இதை தவிர்க்க கடந்த 2014-ம் ஆண்டு துறையூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இந்த சாலையில் வரத்துக்கு 3 நாட்கள் சாலையின் இடதுபுறமும், 3 நாட்கள் வலதுபுறமும், ஞாயிற்றுக்கிழமை இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வியாபார நிறுவனங்களுக்கு காலை 8 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு மேலும் சரக்குகளை இறக்க லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் காலப்போக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. தற்போது, அந்த சாலையில், பரபரப்பான பகல் நேரங்களில் லாரியை நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்குகிறார்கள். சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. 60 அடி ரோடு என்பது தற்போது ஆக்கிரமிப்புகளால் 40 அடி ரோடாக உள்ளது.
பண்டிகை காலம்
மேலும் பல வர்த்தக நிறுவனங்களின் பார்க்கிங் பகுதியை வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்துகிறார்கள். இதன்காரணமாக கடைக்கு முன்பாக சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தற்போது பண்டிகை காலங்கள் வருவதால், பொருட்கள் வாங்க இந்த சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் வந்து செல்வார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
எனவே, இதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், திருச்சி சாலையை ஒருவழி சாலையாக மாற்றினால் மட்டுமே போக்குவரத்து நெருக்கடிக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.