ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு: இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - தேர்தலை அமைதியாக நடத்த 144 தடை உத்தரவு அமல்

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று ஓய்ந்தது. இரு தொகுதிகளிலும் தேர்தலை அமைதியாக நடத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-11-01 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காலியாக உள்ள பெங்களூரு ஆர்.ஆர்.நகர்(ராஜராஜேசுவரிநகர்), துமகூரு மாவட்டம் சிரா ஆகிய 2 தொகுதிகளும் காலியாக உள்ளது.

இந்த இரு தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி (அதாவது நாளை) இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்பிறகு, கடந்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அன்றில் இருந்தே இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியது. ஆனாலும் அக்டோபர் மாதம் 20-ந் தேதியில் இருந்து ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட தொடங்கினார்கள். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இதனால் 2 தொகுதிகளிலும் 3 கட்சிகளின் தலைவர்களும் முகாமிட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். கடந்த 2 நாட்களாக முதல்-மந்திரி எடியூரப்பா, சிரா மற்றும் ஆர்.ஆர்.நகர் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அதுபோல, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னாள் முதல்-மந்திரிகளான சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் சிரா, ஆர்.ஆர்.நகர் தொகுதிகளில் முகாமிட்டு தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், ஆர்.ஆர். நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் நாளை காலை வாக்குப்பதிவு நடைபெறுவதால், நேற்று மாலை 6 மணியுடன் 2 தொகுதிகளிலும் பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது. இதன் காரணமாக நேற்று காலையிலேயே பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மந்திரிகளும், மூத்த தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

குறிப்பாக ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நேற்று காலையில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரிகள் அசோக், கோபாலய்யா உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்கள். ஆர்.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று காலையில் இருந்து மாலை வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதுபோல, சிரா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதுபோல, சிரா தொகுதியில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், பா.ஜனதா துணை தலைவர் விஜயேந்திரா மற்றும் தலைவர்கள் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். சிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் மந்திரி ராஜண்ணா உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். இதையடுத்து, நேற்று மாலை 6 மணியுடன் 2 தொகுதிகளிலும் பகிரங்க பிரசாரம் நிறைவு பெற்றது. பகிரங்க பிரசாரம் ஓய்ந்தாலும், இன்று (திங்கட்கிழமை) வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அந்த 2 தொகுதிகளிலும் 6 லட்சத்து 77 ஆயிரத்து 526 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். அவர்களில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 330 பேர் ஆண்களும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 107 பேர் பெண்களும், 3-ம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 89 பேரும் உள்ளனர். 18 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 12 ஆயிரத்து 349 பேர் உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான சிரா தொகுதியில் 330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்.ஆர்.நகர் தொகுதியில் 678 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒட்டு மொத்தமாக 2 தொகுதிகளிலும் 1,008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் 2 தொகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக ஆர்.ஆர்.நகர் தொகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள், கர்நாடக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரு தொகுதிகளில் இருந்தும் வெளிநபர்கள் உடனே வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் இதுவரை ரூ.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்