குன்னூர் ராணுவ முகாமில் இளம் ராணுவ வீரர்கள் 278 பேர் சத்திய பிரமாணம் எடுத்தனர்

குன்னூர் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் இளம் ராணுவ வீரர்கள் 278 பேர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

Update: 2020-11-01 15:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆயுத பயிற்சி, உடற்பயிற்சி, இந்தி மொழி பயிற்சி உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடுமையான பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம் செய்து வைத்த பின்னர், அவர்கள் நாட்டின் எல்லைகளில் உள்ள யூனிட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள ஸ்ரீ நாகேஷ் பேர்க்சில் 46 வாரங்கள் பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் 278 பேருக்கு சத்திய பிரமாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராணுவ முகாம் கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் இளம் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம் செய்து வைத்தார். பயிற்சியில் சிறந்து விளங்கிய 5 வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்ட இளம் ராணுவ வீரர்கள் இடையே பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பேசும்போது, இளம் வீரர்கள் மிக உயர்ந்த தரமான பயிற்சி அடைந்ததை பாராட்டுகிறேன். இந்திய ராணுவ வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. தொற்று பாதிப்பு காரணமாக இந்த தருணத்தில் சத்திய பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத இளம் வீரர்களின் பெற்றோர்களை நினைவுகூர்ந்து வாழ்த்துகிறேன். உங்களது எதிர்கால வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றார்.

கொரோனா தொற்று காரணமாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறவில்லை.

மேலும் செய்திகள்