உத்தமபாளையத்தில் ரூ.100 கோடி மோசடி: நிதிநிறுவன பங்குதாரரை கைது செய்ய கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - வீட்டு முன் சமையல் செய்தனர்

உத்தமபாளையத்தில் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் நிதிநிறுவன பங்குதாரரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் வீட்டு முன் சமையல் செய்தனர்.

Update: 2020-11-01 15:30 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அஜீஸ்கான்(வயது 68). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால் (52) என்பவரும் இணைந்து உத்தமபாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். இதில் கோம்பையை சேர்ந்த கருப்பசாமி (55) மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிதி நிறுவனத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் டெபாசிட் செய்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜீஸ்கான் இறந்து விட்டார். அதன்பின் ஜமால் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் ஜமால் மற்றும் கருப்பசாமி ஆகியோர் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டு நடத்திய தொகை என மொத்தம் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிதி நிறுவன பங்குதாரர் ஜமால் மற்றும் மேலாளர் கருப்பசாமி ஆகியோர் உத்தமபாளையத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுத்ததாகவும், அந்த பணத்தை அஜீஸ்கான் வீட்டில் கொடுத்து வைத்திருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நேற்று அஜீஸ்கான் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை முற்றுகை போராட்டம் நீடித்தது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் வீட்டுமுன் சமையல் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக் கண்ணு ஆகியோர் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், நிதி நிறுவன பங்குதாரர் ஜமால், மேலாளர் கருப்பசாமி ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில், உத்தமபாளையம் தாசில்தார் பேசினார். அப்போது அவர், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் டெபாசிட் செய்த பணம் திரும்ப கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் யாரேனும் புகார் கொடுக்காமல் இருந்தால் அவர்களுக்காக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை உத்தமபாளையத்திற்கு வரவழைத்து புகார் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்