விருத்தாசலத்தில் ஆய்வு செய்ய வந்த கலெக்டரின் காரை மறித்து பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி - வீட்டு மனையாக மாறிய சுடுகாட்டை மீட்டு தரக்கோரி மனு
விருத்தாசலத்தில் ஆய்வு செய்ய வந்த கலெக்டரின் காரை மறித்து பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள், வீட்டுமனையாக மாறிய சுடுகாட்டை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டு, காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரின் ஆணைக்கிணங்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில அரசியல் கட்சியின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன்படி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விருத்தாசலம் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது இக்கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரம்-1276, கட்டுப்பாட்டு எந்திரம்-84 மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்-55 ம் இருப்பு உள்ளது. ஆய்வின் போது விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், தாசில்தார் சிவக்குமார், தாசில்தார் (தேர்தல்) பாலமுருகன் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் வருவது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் கஸ்பா தெருவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அப்போது கலெக்டரின் காரை வழிமறித்து அவர்கள் முற்றுகையிட முயன்றனர்.
அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள், தாங்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார், சிலரை மட்டும் மனு கொடுக்க அனுமதி அளித்தனர். பின்னர் சிலர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கஸ்பா தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். யாரேனும் இறந்தால், அவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தும் சுடுகாட்டை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து வீட்டு மனையாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, வீட்டுமனையாக மாறிய சுடுகாட்டை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.