மயிலம் அருகே விபத்து லாரி மீது கார் மோதல்: தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் பலி - 4 பேருக்கு தீவிர சிகிச்சை
மயிலம் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மயிலம்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஜெயந்தி. இவர் கோவில்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி செய்து வந்தார். இவர்களது மகன் கவுதம்(வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயர். சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் இவர்களது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.
அவரது 30-ம் நாள் துக்க நிகழ்வு நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்க கவுதம், ஜெயந்தி மற்றும் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சுப்புலட்சுமி (50), வேல்பாண்டி (37), அவரது மனைவி லட்சுமி பிரியா, இவர்களின் குழந்தைகள் கமலினி(5) யாழினி (3), மற்றும் பேச்சியம்மன் (78) முருகேசன்(70) ஆகிய 9 பேர் ஒரு காரில் சென்னைக்கு சென்றனர்.
அங்கு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் பின்னர், நள்ளிரவில் சொந்த ஊருக்கு காரில் திரும்பினர். காரை, கவுதம் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே டி.கேனிப்பட்டு என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த கார், கன்டெய்னர் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன், அதில் பயணம் செய்த அனைவரும் அதன் இடிபாட்டிற்குள் சிக்கிக் கொண்டு, மரண ஓலமிட்டனர்.
இந்த தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய கவுதம், சுப்புலட்சுமி, வேல்பாண்டி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஜெயந்தி, பேச்சியம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
லட்சுமி பிரியா, இவரது குழந்தைகள் கமலினி, யாழினி மற்றும் முருகேசன் ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.