ராமநாதபுரம் மாவட்டத்தில் பரிசோதனை செய்து தரமான சாலைகள் அமைக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் தர பரிசோதனை செய்து தரமான சாலைகள் அமைக்க நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-11-01 12:15 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழு தலைவருமான நவாஸ்கனி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கடலாடி ஒன்றியம் ஆப்பனூரில் இருந்து மங்கலம் வரையிலான சாலை மற்றும் தமிழ்நாடு கிராம புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாயல்குடி வேம்பார் சாலையில் இருந்து நரிப்பையூர் கடற்கரை சாலை வரை உள்ள சாலை, சாயல்குடி வேம்பார் சாலையில் இருந்து மாணிக்கம் நகர் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளின் தரம் குறித்து கடந்த வாரம் ஆய்வு செய்தேன்.

ஆய்வு செய்ததில் மேற்கூறிய சாலைகள் மிகவும் மோசமான நிலையிலும், தரம் குறைவான நிலையிலும் உள்ளன. சாலைகள் அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தார் குறைவாகவும், அதன் தரமும் குறைவாகவும் உள்ளது. சாலைகளோடு அமைந்துள்ள கல்வெட்டும் மிகவும் மோசமாக உள்ளது. அதற்காக பயன்படுத்தப்பட்ட சிமெண்டு தரம் குறைவாக உள்ளது. எனவே சாலைகளின் மாதிரிகளை பெற்று அதனை ஆய்வுக்காக அனுப்ப உள்ளேன்.

மேலும் தரமில்லாமல் அமைக்கப்பட்ட சாலைகளை தேசிய தரக்கண்காணிப்பகம் ஆய்வு செய்து இந்த சாலை தரம் உடையதாக உள்ளது என எந்த முகாந்திரத்தில் சான்று அளித்தது என தெரியவில்லை. மாநில அரசின் சார்பாக சாலைகளின் தரம் எவ்வாறு ஆய்வு செய்யப்பட்டது என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, மேற்கூறிய சாலைகளின் தரத்தை மீண்டும் பரிசோதிக்க தேசிய தரக் கண்காணிப்பகத்திற்கும், மாநில அரசின் தரக் கண்காணிப்பு ஆணையத்திற்கும் பரிந்துரைக்க உள்ளேன். மக்களின் வரிப்பணம் வீணாவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தரமில்லாது அமைக்கப்பட்ட சாலைகளை மீண்டும் ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப்பட்டபடி தரமான சாலைகளாக அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து சாலைகளையும் ஆய்வு செய்ய உள்ளேன். தரமில்லாமல் போடப்பட்டிருப்பின், அதனை மீண்டும் தரமான சாலைகளாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தரமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள் மற்றும் அரசு திட்டங்களை எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் முறையாக ஆய்வு செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்