வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கலா? அதிகாரிகள் திடீர் சோதனையால் பரபரப்பு
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால் தண்ணீரில் மூழ்கி வெங்காய சாகுபடி குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில்இருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயத்தின் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வேலூரில் 1 கிலோ வெங்காயம் ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயத்தை நினைத்தாலே இல்லத்தரசிகள் கண்களில் கண்ணீர் வருகிறது. ஏழை மக்கள் இதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து சோதனை செய்ய வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுமதிக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர் தலைமையில் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரர், வட்ட வழங்கல் அலுவலர்கள் நெடுமாறன், பலராமன், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு கடையாக அவர்கள் சென்று லாரியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் எவ்வளவு?, விற்பனை செய்யப்பட்டது எவ்வளவு?, கையிருப்பில் வெங்காயம் உள்ளதா?, எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது? என கோப்புகளை ஆய்வு செய்தனர். மேலும் குடோனில் இருந்த வெங்காயத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
சுமார் 35 கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. எந்த கடையிலும் வெங்காயம் பதுக்கவில்லை என்பது தெரியவந்தது.
அதிகாரிகள் திடீரென நேதாஜி மார்க்கெட் பகுதியில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.