ஓசூரில் தனியார் நிறுவனத்தில் சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்
ஓசூரில் தனியார் நிறுவனத்தில் சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதல் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மகேஷ்வர் (வயது 27), சரத்பேரா (35), தாசா நத்தா மாலிக் (50) உள்ளிட்டோர் ஒரு தொட்டியில் பழைய இரும்பு குழாய்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது பழைய தொட்டி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மகேஷ்வர், சரத்பேரா உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் மகேஸ்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் மற்ற 2 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த தனியார் நிறுவனத்திற்கு சென்று சுவர் இடிந்து விழுந்து இறந்த மகேஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் நிறுவனத்தில் சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.