ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி புதிதாக 79 பேருக்கு பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-11-01 06:33 GMT
ஈரோடு, 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் கொங்கு மண்டலத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 303 ஆக உயர்ந்தது. அதேசமயம் கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 151 பேர் குணமடைந்தார்கள். இதனால் கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 367 பேர் மீண்டு உள்ளார்கள். இதுவரை 812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலி

கொரோனாவுக்கு மாவட்டத்தில் மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஈரோடு பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்த 66 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந் தேதி உயிரிழந்தார். இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த 75 வயது முதியவர் 29-ந் தேதியும், ஈரோடு குமரன்நகரை சேர்ந்த 59 வயது நபர் நேற்று முன்தினமும் பரிதாபமாக இறந்தார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்