சுசீந்திரம் அருகே மர்மவிலங்கு கடித்து 800 கோழிகள் சாவு வனத்துறையினர் விசாரணை
சுசீந்திரம் அருகே மர்மவிலங்கு கடித்ததில் 800 கோழிகள் செத்தன. இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே தெங்கம்புதூரை அடுத்த பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ். இவர் வீட்டின் அருகில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோழி இறைச்சிக்காக 1,500 கோழிகளை வளர்த்து வந்தார். நேற்றுமுன்தினம் சதீஷ் வழக்கம் போல் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீரை வைத்து விட்டு வந்தார்.
பண்ணைக்கு நேற்று காலை சதீஷ் சென்றார். அப்போது கோழிகள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பண்ணை முழுவதும் பார்த்த போது 800 கோழிகள் இறந்தது தெரிய வந்தது. அவற்றின் மீது ஏதோ கடித்தது போன்ற காயம் இருந்தது. எனவே மர்மவிலங்கு கடித்து கோழிகள் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விசாரணை
இதுபற்றி சதீஷ் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்ததுடன், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். கோழி மீது இருந்த காயத்தை பார்க்கும் போது காட்டு பூனை அல்லது செந்நாய் போன்றவை கடித்து இருக்கலாம் என்று கருதுகிறார்கள். எது கடித்தது என்று உறுதியாக தெரியவில்லை. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.