தூத்துக்குடி- ஏரலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் வேளாண் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தல்
மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி, ஏரலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.;
தூத்துக்குடி,
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. அதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உண்ணாவிரதம் இருக்க போலீசாரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் இருக்க போலீசார் காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில் வி.வி.டி. சிக்னல் அருகே உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் பீனுலால், முன்னாள் மாநகர தலைவர் ஜெயக்குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏரல்
மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உத்தரவின்படி ஏரல் காந்தி சிலை முன்பு அறவழி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் காமராஜ், மாவட்ட தலைவர் தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் வட்டார தலைவர்கள் சற்குரு, கோதண்டராமன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 17 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.